காளஹஸ்தி கோவில் வரலாறு || The Sacred Kalahasti Temple of Lord Shiva – Eternal Abode of Vayu Lingam, Mythological Legends, Spiritual Significance, Divine Architecture, Miracles, Devotee Faith, and Timeless Religious History

திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி) தலவரலாறு:

இறைவர் திருப்பெயர்:

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்.

இறைவியார் திருப்பெயர்:

ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானாம்பிகை, ஞானசுந்தரி

தல மரம்:

ஆல மரம் , மகிழமரம் - Maulsari Tree

தீர்த்தம்:

ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு. வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் முதலியோர்.

     முன்பொரு காலம் ஆதிசேஷனுக்கும் வாயு தேவனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில் ஆதிசேஷன் கைலாய மலையைச் சுற்றி மூடிக்கொள்ள வாயு தேவன் தன்னுடைய பலத்தால் மலைச்சிகரங்களை பெயர்த்தெறிய முயற்சித்தார். ஆயினும் இயலவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிசேஷன் லேசாக அசைய அந்த நேரத்தில் வாயுதேவன் தன் பலத்தால் சிகரங்களை பெயர்த்து கொண்டு வந்தவற்றுள் ஒன்றுதான் திருக்காளத்தி சிகரம்.

     ஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.

     இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)

     அருச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

     'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

     நக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றாராம்.

     சண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது; முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்; அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.

     தெலுங்கு கவிஞரான 'தூர்ஜடி' (DHURJATI) என்பவர் இத்தலத்தைப் புகழ்ந்து 'ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர மகாத்மியம்' என்ற பெயரில் கவிதை வடிவில் நூலொன்றை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார்.

     வீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர்,வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உரியன. சேறைக் கவிராயர் உலா ஒன்றும் பாடியுள்ளார்.  

Specialities:

     பஞ்சபூத தலங்களுள் இது வாயுத் தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.

     சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இவ் ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி - இவ்விடம் சிறப்பாக சொல்லப்படுகிறது.

     அன்புக்குச்சான்றான கண்ணப்பர் வழிபட்டு இறைவனுடைய வலப்பக்கத்தில் நிற்கும் பெரும் சிறப்பு வாய்ந்த பதி; அவர் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற விழுமிய தலம்.

     'அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி ' எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.

     நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி ' பாடியுள்ள பெருமை பெற்ற தலம்.

     மலையடிவாரத்தில் உள்ளது கோயில்; இம்மலை, 'கைலாசகிரி ' (கண்ணப்பர் மலை என்றும் மக்களால்) என்று வழங்கப்படுகிறது. (இந்நிலப்பரப்பை தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும், வழியில் 'தொண்டைமான் நாடு ' என்னும் ஓரூர் உள்ளது. தற்போது தெலுங்கு நாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் 'தொண்டமநாடு ' என்று வழங்குகின்றனர்.)

     இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம் ' என்றழைக்கப்படுகிறது.

     ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் கோபுரம் (காளிகோபுரம்) ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கி. பி. 1516-ல் கட்டப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியவரும் இவரே.

     பிரதான கோபுரம் 'தக்ஷிண கோபுரம் ' எனப்படுகிறது; 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம்.

     கோயிலின் பிரதான வாயிலில் உள்ள கோபுரமும் (பிக்ஷசாலா கோபுரம்), ஏனைய கோபுரங்களும் 12-ம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும்.

     இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது.

     பாதாள விநாயகர் சந்நிதி - விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

     2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது; கவனித்தால்தான் தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால், 'இரண்டு கால் மண்டபம் ' பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது.

     சொக்கப்பனை கொழுத்தி, எரிந்த அக்கரியை அரைத்து (ரக்ஷையாக) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடுவது; இங்கு விசேஷம்.

     பொன்முகலி ஆற்றுச் செல்லும் படிக்கட்டில் இறங்கும்போதே முதற்படியின் இடப்பால் தேவகோட்டை மெ. அரு. தா. இராமநாதன் செட்டியாரின், உருவச்சிலை உள்ளது; கி. பி. 1912-ஆம் ஆண்டிலேயே ஒன்பது லட்சம் ரூபாய் செலவு செய்து இத்திருக்கோயிலில் திருப்பணிகளைச் செய்து மகா கும்பாபிஷேகத்தைச் செய்த பெரும் புண்ணியசாலி அவர்.

     இரு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும்.

     இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது

     இங்கு வந்து பாடிப் பரவிய சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார். ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். திருவல்லம் தொழுது இங்கு வந்த சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.

     மூலவர், சுயம்பு - தீண்டாத் திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது.

     சுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

     சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது.

     மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு; இஃது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.

     கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம்; பச்சைக்கற்பூரத்தைப் பன்னீர்விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு தருகின்றனர். (நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து தருகிறார்கள்.)

     பண்டை நாளில் ரிஷிகள் பொன்முகலியில் நீராடி கிழக்கு நோக்கித் தரிசிக்க அவர்கட்கு காட்சி தரவே சுவாமி மேற்கு நோக்கினார் என்ற கருத்து சொல்லப் படுகிறது.

     மூலவருக்கு கங்கைநீரை தவிர (சுவாமிக்கு மேலே தாராபாத்திரமுள்ளது) வேறெதுவும் மேனியில் படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே.

     சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

     இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.நாடொறும் நான்கு கால பூஜைகளே உள்ளன.

     அர்த்தசாமப் பூஜை இல்லையாதலின், சாயரட்சை பூஜையுடன் முடித்து, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகிறார்கள்.

     பரத்வாஜ, மகரிஷி இங்குத் தவஞ்செய்து பேறு பெற்றாராதலின் அக்கோத்திரத்தைச் சேர்ந்தவர்களே இங்குப் பூஜைகளைச் செய்து வருகின்றார்கள்.

     கிருஷ்ணதேவராயர், அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாக பல சிவலிங்கங்களும், ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது.

     இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால், இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனிபகவான் மட்டும் உள்ளார்.

     அம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது.

     'கைலாசமலை ' - கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை 25 கி.மீ. பரப்புடையது. இம்மலைக்காட்டில் பல இடங்களில் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பர் திருவுருவங்களும் உள்ளன.

     திருகாளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. இது சசிகுல சாளுக்கிய வீரநரசிங்கத்தேவன் திருக்காளத்தி தேவனான யாதவராயரால் கட்டப்பட்டது. இதுவன்றி தியாகமேகன் மடம் ஒன்று இருந்ததாம்.

     பொங்கல் விழாவில் ஒரு நாளிலும், பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இரு நாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார்; அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலைத் தொடங்கி மறுநாள் முடிவுறுமாம்.

     சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது.

     தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முக்தி எனப்படுகிறது.

     இங்கு "நதி-நிதி-பர்வதம்" என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி-பொன்முகலியாற்றையும், நிதி - அழியாச் செல்வமான இறைவியையும் இறைவனையும், பர்வதம் - கைலாசகிரியையும் குறிப்பனவாம்; இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனப்படுகிறது.

     பொன்முகலி உத்தரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாகும்.

     அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

     கைலாசகிரியில் சற்று சுற்றினாற்போல் கற்களின் மீது ஏறிச் சென்றால் அங்குள்ள சிறிய கோயிலில், ஒரு கால் மடக்கி ஒரு காலூன்றியவாறு உள்ள ஒரு உருவம் உள்ளது; இவ்வுருவம் நக்கீரர் என்றும் சித்தி பெற்றவர் என்றும் சொல்கின்றனர்; ஆனால் இவ்வுருவம் பற்றி ஏதும் நிச்சயயிக்க முடியவில்லை.

     கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் மணிகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. அங்கே உள்ள மண்டபத்திற்கு மணிகரணிகா கட்டம் என்று பெயர். பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதியருளினார் என்று வழங்கி வருகிறது. அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்தில் கொண்டு வலப் பக்கமாக ஒருக்களித்து சாய்த்துக் கிடத்தினால் சாகிற போது உடல் திரும்பி வலக் காது வழியாகவே உயிர் பிரியும்.

     கண்ணப்பர் கோயில் - இக்கோயில் மண்டபமும் சுற்றிய தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பட்டது.

     சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழதேவன், முதலாம் இராஜாதிராஜ தேவன், இராசகேசரி வர்மனாகிய வீரராஜேந்திரன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவன், இவர்கள் காலங்களிலும், விஜயநகர வேந்தர்களில், வீரப்பிரதாப ஹரிஹரராயர், வீரப்பிரதாப தேவராயர், வீரப்பிரதாப வீரகிருஷ்ணன் தேவராயர், வீரசதாசிவ மகாராயர் முதலானோர் காலங்களிலும், காகதீய வம்சத்துக் கணபதி காலங்களிலும், மற்றும், விஜயகண்ட கோபால தேவன், ஆளும் திருக்காளத்தித் தேவனாகிய கண்ட கோபாலன் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

     இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் திருக்காளத்தி உடைய நாயனார், திருக்காளத்திச்சிவனார், ஆளுடையார் தென்கயிலாயமுடையார் என்னும் பெயர்களாலும், விடங்கர் சோதிவிடங்கர் என்னும் பெயராலும் கூறப்பெற்றுள்ளனர். 

     திருக்காளத்தி உடையார்க்கு வைகாசியில் திருவிழா நடைபெற்று வந்தது. அவ்விழா முட்டாமல் நடைபெறுவதற்கு நரசிங்க காளத்தி தேவனான யாதவராசன் சயங்கொண்ட சோழமண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து. கருப்பற்று நாட்டு வெண்ணெய் நல்லூரைத் தட்டார் பாட்டம், தறிஇறை, வெட்டி, முட்டையாள், பட்டிக்காசு காணிக்கை, கன்மிப்பேறு, மற்றும் எப்பேர்பட்ட வரிகளும் அகப்பட தேவதானமாக விட்டிருந்தான்.

     இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோதிவிடங்கர், எட்டாந் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளி, திருச்சாந்து கற்பூர வெள்ளைச் சாத்தித் திருவுலாப்புறம் செய்து, தோசை, திருக்கண்ணமுது இவைகளை அமுது செய்தருளுவது வழக்கம். அதன் பொருட்டுப் பொலியூட்டாக நூறு பணம் அளிக்கப்பெற்றிருந்தது. இக்கோயிலில் மாசித் திருவிழாவும் மிகச் சிறப்பாய் நடைபெற்று வந்தது. அவ்விழாவின் ஏழாம் நாளில் இமையோர்கள் நாயகர் திருவீதிக்கு எழுந்தருளி, திருக்கல்யாணம் பண்ணி, திருவூடல் தீர்த்து திருக்கோயில் வாசலில் பலிபீடத்தண்டையில், திருவாலத்தில் தட்டம் எடுத்த பிறகு அத்தேவர் தோசை அமுது செய்தருளுவது உண்டு. அதன் பொருட்டும் நிவந்தம் செய்யப்பெற்றிருந்தது.

     திருக்காளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. அது சசிகுல சளுக்கி வீரநரசிங்க தேவன் திருக்காளத்தித் தேவனான யாதவராயனால் கட்டப்பெற்றது. அம்மடத்தில் மாகேஸ்வரருக்குச் சோறிட பெரும்பூண்டி நாட்டுப் பொன்னையன் பட்டு என்னும் ஊரின் நாற்பால் எல்லைக்கு உட்பட்ட நன்செய் புன்செய் நிலத்தை மேற்கூறப்பெற்ற வீரநரசிங்க தேவன் இராசராச தேவரின் 15ஆம் ஆண்டில் கொடுத்திருந்தான்.

     இதுவன்றித் தியாகமேகன்மடம் ஒன்று இருந்தது. இதில் நாள் ஒன்றுக்கு முப்பது தேசாந்தரிகளுக்குச் சோறும், ஐந்து பிராமணர்களுக்கு அரிசியும் இடுவதற்கு உடலாக (மூலதனமாக) விசயகண்ட கோபால தேவரின் நான்காம் ஆண்டில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டுப் பேரூர் நாட்டு மதுரைவாய் திருநல்லுழான் திருநட்டப்பெருமாள் தியாகமேனன் நிவந்தம் அளித்திருந்தான்.

     இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் என்று ஒன்று இருந்தது.

     திருக்காளத்தி உடைய நாயனாரின் திருமலை அடிவாரத்தில் வீரநரசிங்க தேவன் திருநந்தவனம் என்னும் பெயருள்ள நந்தவனம் இருந்தது. அது சசிகுலசளுக்கி வீரநரசிங்க தேவனான யாதவ ராயனால் ஏற்படுத்தப்பட்டது. அதன் பொருட்டு வீரநரசிங்க தேவன் ஆற்றூர் நாட்டுக்கோன்பாக்கத்திலும், திருக்காளத்திப் புத்தூரிலும் நெல்வாயிலிலும், தனக்குக் கிடைக்கும் நன்செய் நிலத்தில் பத்தில் ஒன்றாய் வந்த பாடிகாவல் கடமை, பொன் ஆயம், நெல்லாயம் இவைகளை உடலாக விட்டிருந்தான். ஆலால சுந்தர நந்தவனம் என்று ஒன்று இருந்ததை முதற்குலோத்துங்க சோழனின் 49-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஒரு கமுகம் தோட்டத்திற்கு கண்ணப்ப தேவர் பெயர் வைக்கப்பெற்றிருந்தது.

     இவ்வூரில் திருமணிக்கெங்கையுடைய வேறு கோயில் ஒன்று உண்டு. திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழதேவரின் பதினொன்றாம் ஆண்டில், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லம் நாட்டுப் பெருந்தண்டலத்துக்கோறுழான அமுதாழ்வான் மங்கை நாயகன் மழவராயனால் அக்கற்றளியும், திருமண்டபமும், சோபானமும் கட்டப்பெற்றதாகும்.

     இக்கோயிலில் தனி இடத்தில் சசிகுலசளுக்கி தனிநின்று வென்றானாகிய வீரநரசிம்ம தேவனாகிய யாதவராசன் மல்லிகார்ச்சுனரை எழுந்தருளுவித்திருந்தான்.

     இவ்வூர் சயங்கொண்ட சோழமண்டலத்து, திருவேங்கடக் கோட்டத்து, ஆற்றூர் நாட்டுத் திருக்காளத்தி என இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது. திருக்காளத்தி முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் காளத்தியாகிய மும்முடிச் சோழபுரம் என்றும் வழங்கப்பெற்றிருந்தது.

     முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயிலில் கிருத்திகைத் தீப விழாவைப்பற்றிக் கூறப்பெற்றுள்ளது. அதற்குக் கங்கைக்கொண்ட சோழமிலாடுடையான் நிவந்தம் அளித்திருந்தான். கண்ணப்பர் பிறந்த நாடு பொத்தப்பிநாடு என்று சேக்கிழார் கூறியுள்ளார். அப்பொத்தப்பி நாடு இவ்வூர்க் கல்வெட்டிலும் குறிக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாட்டுத் தொகையில் புரிசை நாட்டுப்புரிசை எனக் குறிப்பிட்டுள்ளார். அப்புரிசை நாடு மணவில் கோட்டத்தில் உள்ளது என்பதையும் இக்கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

     அளவு கருவிக்குக் காளத்தியுடையான் மரக்கால் என்றும், ஒரு தலைவனுக்குத் திருக்காளத்தி தேவன் என்றும், திருவிளக்குக் குடிகளில் ஒருவனுக்கு மன்றாடி காரிசாத்தன் திருக்காளத்திகோன் என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள மண்டபம் சின்னையா மண்டபம் எனப் பெயர் பெற்றுள்ளது.

திருநுந்தாவிளக்குகளுக்கும், திருமந்திர போனக புறத்திற்கும் நிபந்தங்கள் மிகுதியாக அளிக்கப்பெற்றுள்ளன. ஒரு நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும் சாவா மூவாப்பசு 32-ஆகும். ஆடு ஆயின் 96 ஆகும். 96-ஆடுவிடுபவர் பொலிகிடா இரண்டும், பொலி மொத்தை இரண்டும் விடுவது வழக்கம்.

     நுந்தா விளக்கேயன்றி சந்தி விளக்கும் வைப்பதுண்டு. ஒரு சந்தி விளக்குக்கு ஐந்து நற்பழங்காசு அளிப்பதுண்டு. 32 - பசுமாடு விடுபவர் ரிஷபம் ஒன்றையும் விடுவர்

Contact Address : அமைவிடம்:

     மாநிலம் : ஆந்திரா

     சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா - கூடூர் இரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம்.

     திருப்பதியிலிருந்து 40 கி. மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 110-கி. மீ. தொலைவிலும் உள்ள சிறந்த தலம். திருப்பதி; ரேணிகுண்டாவிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

     சென்னையிலிருந்தும், காஞ்சிபுரத்திலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.

     தொடர்புக்கு :- 08578 - 222240





This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:
  Content publishing
  Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:
  Active Facebook and Instagram account
  Basic knowledge of using mobile and social media

For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160

a. Online Part Time Jobs from Home

b. Work from Home Jobs Without Investment

c. Freelance Jobs Online for Students

d. Mobile Based Online Jobs

e. Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob


Post a Comment

Previous Post Next Post