கோளறுப் பதிகப் பாடல்கள் (lyrics) விளக்கத்துடன் படிக்கலாம் || நவகிரக தோஷங்கள் தீர்க்கும் கோளறுப் பதிகப் பாடல்கள் || கோளறுப் பதிகப் பாடல்கள் Audio File Mp3

நவகிரக தோஷங்கள் தீர்க்கும் கோளறுப் பதிகப் பாடல்கள் - விளக்கங்களுடன் இங்கே படிக்கலாம்!

பாடல் எணிக்கை:
பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் கொண்ட இந்த கோள்களின் தீவினையை நீக்கும் இந்த கோளறுப் பதிகப் பாடல்கள் சிறந்த பரிகாரப் பாடல்களாக விளங்குகின்றன.

சைவம் வளர்க்க திருஞான சம்பந்தருக்கு அழைப்பு:
மதுரை பாண்டிய மன்னன் நின்ற சீர்நெடுமாறன் சமண மதத்தில் ஆழ்ந்த பற்றுடன், மற்ற சமயங்களை புறக்கணித்து வாழ்ந்து வந்தார். ஆனால், அவரது மனைவி மங்கையர்க்கரசியார் சைவ சமயத்தில் விருப்பம் கொண்டிருந்தார். சமணர்களின் அபாயகர செயல்களால் நாட்டில் குழப்பம் உருவாக, அதை நிறுத்தவும் சைவம் வளரவும் திருஞான சம்பந்தருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பின்படி, திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரச பெருமானும் திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்கு எழுந்தருளினர். அவர்களின் பிரயாசையால் சைவம் மீண்டும் தழைத்து, நாட்டில் நல்லாட்சி நிலவியது.

திருஞான சம்பந்தரின் கோளறுப் பதிகம் உருவான கதை:
மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரைக்குப் புறப்பட திருவாதவூரிலிருந்து திருஞானசம்பந்தர் புறப்பட்டார். ஆனால் அன்றைய நாள் நல்ல நாள் இல்லை, அதனால் இன்று பயணிக்க வேண்டாம் என திருநாவுக்கரசர், சம்பந்தரின் பயணத்தைத் தடுத்தார்.

இதைக் கேட்ட சம்பந்தர், இறைவனின் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என கூறி பத்து பாடல்களைப் பாடி அருளினார். அதோடு இந்த பதிக பயனையும் சேர்த்து மொத்தம் 11 பாடல்களை அருளினார். கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும்

நவகிரக தோஷங்கள் தீர்க்கும் கோளறுப் பதிகப் பாடல்கள்:
கோளறு பதிகம் முதல் பாடல்:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.


பொருள்: புலித்தோலை தோளில் அணிந்த விஷமுண்ட கழுத்தைக் கொண்ட, திங்களையும் கங்கையையும் தலைமேல் அணிந்த ஈசனின் அடியவருக்கு ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட நவகோள்களும் எந்நாளும் நன்மையே செய்யும்.



கோளறு பதிகம் இரண்டாவது பாடல்:
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.


பொருள்: எலும்பும் கொம்பும் மார்பில் அணிந்து, விடையேறி, மத்தமாலை, கங்கை சூடிய ஈசனை வணங்கும் அடியார்களுக்கு, 27 நட்சத்திரங்களும், எல்லா நாள்களும் மிகச் சிறந்த நன்மையே புரியும்.



கோளறு பதிகம் மூன்றாம் பாடல்:
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.


பொருள்: பவள மேனியனும் ஒளிமிக்க நீறு அணிந்தவரும், சக்தியோடு விடைமீது ஏறிவரும் கொன்றை திங்கள் அணிந்த நம் ஈசனை வணங்குபவருக்கு, திருமகள், துர்கை, அஷ்ட திக்கு பாலகர்கள், பூமியின் அதிதேவதை ஆகியோர் நன்மையே புரிவர். குறைவற்ற செல்வமும் வந்து சேரும்.



கோளறு பதிகம் நான்காம் பாடல்:
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


பொருள்: பெண்ணை தென்பால் வைத்த பரமன், கங்கையும் கொன்றை மாலையும் அணிந்தவன். அவனைத் தொழுது ஏத்தும் அடியவருக்கு கூற்றுவன், அக்னி, காலனின் தூதுவர்கள், கொடும் நோய்கள் என எதுவும் தீமை விளைவிக்காது. மாறாக நன்மையே புரியும்.



கோளறு பதிகம் ஐந்தாம் பாடல்:
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


பொருள்: நஞ்சுண்ட நீலகண்டன், அன்னையோடு விடையேறி வரும் ஈசன், தலையில் வன்னி, கொன்றை அணிந்த பரமனை வேண்டுவோருக்கு, அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் எந்த இடம் நேராது. நன்மையே விளையும்.



கோளறு பதிகம் ஆறாம் பாடல்:
வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


பொருள்: எளிய ஆடை அணிந்தவரும் கங்கை, கொன்றை, வன்னி அணிந்தவருமான ஈசனைப் பணிவாருக்கு சிங்கம், புலி, கொல்லும் யானை, பன்றி, கொடும் நாகம், கரடி போன்ற எதனாலும் இடர் நேராது. நன்மையே விளையும்.



கோளறு பதிகம் ஏழாம் பாடல்:
செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


பொருள்: மங்கையை ஒரு பாகமாக ஏற்ற விடையேறும் எங்கள் செல்வனை, மதியும் நீரும் தலையில் சுமக்கும் ஈசனை சரண் அடைந்த அடியவருக்கு, வெப்பம், குளிர், வாதம், பித்தம் போன்ற எந்த தன்மையும் இடர் செய்யது. நன்மையே விளைவிக்கும்.



கோளறு பதிகம் எட்டாம் பாடல்:
வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


பொருள்: விடைமேல் எழுந்தருளி வன்னி, கொன்றை மலர் சூடி நிற்கும் ஈசனை வணங்கும் அடியவருக்கு, ஆணவத்தால் கயிலை தூக்க முயன்ற ராவணனுக்கு வந்த துன்பம் போன்ற எதுவும் வந்துவிடாது. மூழ்கினாலும் ஆழ்கடலும் நன்மை செய்யும்.



கோளறு பதிகம் ஒன்பதாம் பாடல்:
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


பொருள்: எல்லாமுமாக நின்று பல வடிவங்களில் விடைமீது தோன்றும் ஈசன், நீர்மகளோடு எருக்கும் தலையில் சூடியவன். அவனைப் பணிவாருக்கு நான்முகன், திருமால், மறைகள், தேவர் என அனைவரும் நலன் புரிவர். கடலும், மேரு மலையும் கூட நன்மையே செய்யும்.



கோளறு பதிகம் பத்தாம் பாடல்:
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


பொருள்: சக்தியோடு நாளும் நன்மை செய்யும் ஈசன், நிலவையும் நாகத்தையும் சூடிக் கொண்டவன். அவனை வணங்குவோருக்கு புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான விபூதி எனும் செல்வம் கிட்டும். அதனால் சொல்லொணாத நன்மைகள் கிட்டும்.



கோளறு பதிகம் பதினோறாம் பாடல்:
தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!


பொருள்: சிவனையே பணிந்து அவனையே நெஞ்சில் நிலைக்கச் செய்த அடியார்கள் இப்பதிகத்தை ஓதிவர நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும், சகல தேவர்களும் அவர்களுக்கு நன்மையே புரிவர். சிவத்தைத் தொழும் அடியார்கள் மண்ணகம் மட்டுமின்றி விண்ணிலும் அரசாள்வர், இது நம் ஆணை.



கோளறுப் பதிகப் பாடல்கள் audio File Mp3:



Post a Comment

Previous Post Next Post