கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செண்பகவள்ளியம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் தலவரலாறு - Temple History || தலவரலாறு || ஆன்மீகம் அறிவோம் || Senbagavalli amman kovil temple history

கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செண்பகவள்ளியம்மன் பூவனநாத சுவாமி திருக்கோயில் தலவரலாறு:

அகத்தியர் வந்த வரலாறு :
சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் வந்து ஒருங்கே கையிலை மலையில் கூடியதால் உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமன் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப்பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார். அங்கு களாமரக் காட்டில் லிங்கத்திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு விட்டு அங்கு தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார்.

அம்முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே அகத்தியர் தீர்த்தம் என்று பெயர் பெற்ற இத்திருக்கோயிலின் திருக்குளம் ஆகும். அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் காட்சி தந்து தமது பெருமைகளை முனிவர்களுக்குச் சொல்லியபின் பொதிகை மலையில் சென்று தமது திருமணக் காட்சியைக் காணுமாறு கட்டளையிட்டார். இறைவன் கட்டளைப்படி அகத்தியர் பூவனநாதர் பெருமைகளை முனிவர்களுக்கு எடுத்துக்கூறி இங்கு கோயிலும், கோயில்புரியும் உண்டாகும் என்று கூறி முனிவர்களிடம் விடைபெற்று தன் பயணத்தை தொடர்ந்தார். அவர் பொதிகை அடைந்த போது உலகம் சமநிலை பெற்றது.

சங்கன் பதுமன் சந்தேகம் தீர்த்தது:
முன்பு ஒரு காலத்தில் சங்கன் பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக்காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனைப் பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர்.

அவர்கள் முன் இறைவன் தோன்றி அவர்களுக்குக் காட்சி கொடுத்து, இன்று முதல் இச்சிவலிங்கம் பூவனநாதர் என்று பெயர் பெறும். புன்னைக்காவலில் (சங்கரன் கோயில்) உங்கள் ஐயம் தீர்ப்போம். சிவன் பெரியவன், திருமால் பெரியவள் என்பது உறுதி, அதனால் நான் சிவன், திருமால் சிலை திருமால் எனக்கு மனைவி; மேலும் அவளே எனக்கு அம்பு, வாகனம், அடியாள் ஆகி சக்தி சத்தனாகிய என்னுள் அடக்கம் என்பதில் ஐயம் இல்லை என்று கூறி அவர்தம் ஐயம் தெளிவித்து மறைந்தார். இதுவே இத்திருத்தலத்து இறைவனுக்கு பூவனநாதர் என்ற பெயர் வந்த வரலாறு ஆகும்.

செண்பகவேந்தன் வரலாறு:
வெள்ளிமலையில் சிவக்குழுவிற் சிறந்தவனாக விளங்கிய வாமனன் என்பவன் பெண் மயக்கமுற்று தன் நிலை தாழ்ந்தது கண்டு நந்தி தேவர் அவனை சபித்ததால் அவன் வெம்பக்கோட்டையில் வேந்தனாகப் பிறந்து செண்பகமன்னன் எனப்பெயர் பெற்றான்.

சிவனடியாரான செண்பகமன்னன் கனவில் இறைவன் தோன்றி திருவாய் மலர்ந்தருளியபடி அவன் பொன்மலை களாக்காட்டினை அடைந்து லிங்கவடிவில் இருந்த பூவனநாதரை வழிபட்டு இறைவன் ஆணைப்படி அருவிக்கு மேற்கே பிள்ளையார், அருவிக்குளம், அருவிக்கு தென்மேற்கே வடக்குப் பார்த்துப் பிள்ளையார், இறைவன் பூவனநாதருக்குத் தனிக்கோயில், அதன் தென்புறம் அம்பாளுக்குத் தனிக்கோயில் ஆகியவற்றை காமிகா ஆகம முறைப்படி கட்டினான். செண்பகவேந்தன் அமைத்ததால் இத்திருத்தலத்து அம்பாள் செண்பகவல்லி எனப்பெயர் பெற்றாள். இத்திருக்கோயிலில் நடைபெறும் நாள் விழா, பட்ச விழா, மாதாந்திர, வருடாந்திர விழாக்கள், ஆட்டை விழா, திருமண விழா போன்ற விழாக்கள் ஒழுங்காக நடைபெறும் வகையில் செண்பகப்பேரி என்ற ஊரையும் பல நிலங்களையும், நகைகளையும் வழங்கினான்.

இத்திருக்கோயிலின் தலவிருட்சமான திருக்களா மரத்தைச் சுற்றிலும் திண்ணை கட்டி, தான் இப்பூவுலகில் அவதரித்த பணியைப் பூர்த்தி செய்தான். நன்றி மறக்காமல் நம்முன்னோர்கள் செண்பகமன்னனுக்கு இத்திருக்கோயிலில் தனி சந்நிதி அமைத்து வழிபாடு செய்ததை நாம் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறோம்.

இறைவன் கனவில் உரைத்த ஆணைப்படி, செண்பகமன்னன் பொன்மலை களாக்காட்டிற்கு வந்து அங்கு தவமியற்றிய முனிவர்களுடன் சேர்ந்து ஊர் ஒன்று அமைக்க முயன்றான். அப்போது ஈசன் உருவில் வந்து வடக்கே மதுரை, மேற்கே புன்னைவனம் மற்றும் கழுகுமலை, கிழக்கிலும் மேற்கிலும் கடல் இங்கு அருகில் ஒளிர்குகை உள்ளது. அதில் இராமர் சிவ வழிபாடு செய்தார். அவருடன் வந்த மந்திகள் தங்கிய இடம் மந்தித்தோப்பு, வானரங்கள் தங்கிய இடம் வானரம்பட்டி, மேலும் பாண்டவர்கள் சிவ வழிபாட்டால் மங்களம் பெற்ற ஊரே பாண்டவர்மங்கலம். இவைகளின் நடுவே கோயில்புரியை ஆக்குவாயாக என்று கூறி மறைந்தார். அதன்படியே செண்பகமன்னன் களாக்காட்டினை அழித்து கோயில்புரியை உருவாக்கி சாப நிவர்த்தி பெற்று மீண்டும் சிவகுழுவிற்குத் தலைவனாகி கையிலை சென்றான். இதுவே கோயில்புரி தோன்றிய வரலாறு ஆகும்.

அம்பாள் இறுமாப்பு ஒழிந்த வரலாறு:
இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி ஒரு முறை இறைவன் திருமுடிமிசை அமர்ந்துள்ள கங்கையை இகழ்ந்தனள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது.

சங்கரபட்டர் வரலாறு:
சங்கரபட்டர் எனும் மெய்யன்பர் தன் செல்வமெல்லாம் இழந்து ஏழு வயதுடைய நீலகண்டன் என்னும் ஒரே மகனை இழந்த நிலையிலும் அடியார்களுக்கு உணவளித்து வந்தார். இத்திருத்தலத்து இறைவன் அவர் பெருமையினை உலகிற்கு எடுத்துக்காட்டி அவரை ஆட்கொள்ள, அடியவராக சங்கரபட்டர் இல்லம் வந்தார். சங்கரபட்டர் தனது வறுமை நிலையை வெளிக்காட்டாமல், மனைவியின் தாலியை விற்று அடியவருக்கு உணவளித்தார். உணவு உண்ணும் போது ஈசன் நீலகண்டனை உயிருடன் வர வைத்ததுடன் சங்கரபட்டருக்கு வீடுபேறும் அருளினார்.

உள்ளமுடையான் வரலாறு:
திண்டுக்கல்லைச் சார்ந்த உள்ளமுடையான் என்பவர் ஒரு ஒளி நூல் புலவர். அவர் தீராத வயிற்று நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். கோயில்புரி இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும் என அறிந்து இத்திருத்தலத்திற்கு வந்து இறைவனையும் அம்பாளையும் வழிபட்டார். அதன் பலனாக பலகாலம் அவரைத் துன்புறுத்தி வந்த நோய் நீங்கியது. அதற்கு நன்றிக் கடனாக பழுதுற்றிருந்த இறைவன் திருக்கோயிலை புதுப்பித்து பின்னர் இறைவன் ஆணைப்படி வீடுபேறு பெற்றார்.

மூர்த்திசிறப்பு:
பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரமன் இத்திருத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன், அருள்மிகு பூவனநாதராகப் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்து வருகிறார். பொன்மலை களாக்காட்டிடையே தோன்றிய மூர்த்தி என்பதால் இவருக்குக் களாவனநாதர் என்ற பெயரும் உண்டு. களாக்காட்டிடையே தோன்றி இறைவனை சங்கன் பதுமன் என்ற இரு பாம்புத்தலைவர்கள் பூவனப்பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்து, பூவனப்பூக்களால் அர்ச்சித்ததால் தன் பெயர் பூவனநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

இத்திருத்தலமூர்த்தி, பொன்மலை முனிவர்களாலும், அகத்திய மாமுனிவராலும் பூஜிக்கப் பெற்ற சிறப்புடையவர்.

அம்பாள் அருள்தரும் அன்னை, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இவ்வன்னை, இப்பகுதிமக்களின் வேண்டுதல் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான், இத்திருக்கோயிலுக்கு வரும் அன்பர்கள் முதலில் அம்பாள் சந்நிதியில் வழிபாடு முடித்துவிட்டு பின்னர் சுவாமி சந்நிதிக்குச் செல்கின்றனர்.

இறைவன் திருவுளப்படி இத்திருக்கோயில் செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்டதால் இறைவியின் பெயர் செண்பகவல்லி என்றாயிற்று. அருள் தரும் அன்னை செண்பகவல்லி இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறாள். அம்பாள் செண்பகவல்லியின் பெயர் இல்லாத குடும்பங்களே இப்பகுதியில் இல்லை என்னுமளவிற்கு இத்தாயின் சிறப்பு மேலோங்கியிருக்கிறது. இத்திருக்கோயிலில் உண்டியல் திருடியவனை காவல்துறை காவலர் வடிவிலும், மூக்குத்தி திருடியவனை பட்டர் உருவிலும் அம்பாள் வந்து பிடித்துக்கொடுத்தாள் என்பதும், மகளிரிடம் பலநாள் நகைகள் திருடிய பெண் அம்மன் சந்நிதியில் ஒரு வெள்ளிக்கிழமை பிடிபட்டாள் என்பதும் இத்திருத்தலத்து அம்பிகையின் சிறப்புக்கு ஆதாரங்களாகும்.

இத்திருத்தலத்து அம்பிகையை வழிபட்டுவந்தால் தீராத பிணியெல்லாம் தீரும், எல்லா செல்வமும் நம்மை வந்து சேரும், மனம்போல் மணவாழ்க்கை அமையும், குறைவிலா குழந்தைப்பேறு கிடைக்கும், வாழ்வில் நல்லவையே நடக்கும். இது கலியுகம் கண்ட உண்மை.

தீர்த்தச்சிறப்பு:
இத்திருக்கோயிலின் திருக்குளமே இத்திருத்தலத்தின் சிறப்புமிக்க தீர்த்தமாகும். இது அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டதால் அகத்தியர் தீர்த்தம் என்றும், இதற்கு கெண்டியிலிருந்து நீர் வருவது போல் அருவி நீர் வருவதால் கெண்டித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தீர்த்தக்குளம் திருக்கோயிலுக்கு வடக்கில் பள்ளத்தில் பாறையை ஒட்டி கோயில்பட்டி ச.எண் 421/1 ல் ஏக்கர் 0.50 பரப்பில் அமைந்துள்ளது. மூன்று பக்கங்கள் மதிற்சுவர்களையும், தென்புறம் பாறைகளையும் எல்லைகளாகக் கொண்ட இத்திருக்குளத்தின் வடபுறம், மேல்புறம் மற்றும் தென்மேற்கு மூலை ஆகிய இடங்களில் படிக்கட்டுகள் உள்ளன. தற்போது வடக்குப்பக்கத்து படித்துறை அடைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மூலையில் உள்ளபடித்துறை இத்திருக்குளத்திற்கு தண்ணீர் வரும் அகத்தியர் அருவிக்குச் செல்கிறது.

இப்படித்துறையில் இறங்கிச் செல்லுகையில் முதலில் 8 கல்தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இதில் பாறையை ஒட்டி சிறிய சந்நிதியில் நாகர் மற்றும் விநாயகர் சிலைகள் வடக்கு நோக்கி உள்ளன. இம்மண்டபத்தினை அடுத்து 10 கல் தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு தான் அகத்தியர் அருவி உள்ளது. இதில் மேலே பாறையில் செதுக்கப்பட்ட சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதற்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் விநாயகர், அம்பாள், சுவாமி (லிங்கவடிவம்) முருகன், அகத்தியர் ஆகியோரது உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அதற்கும் கீழே பாறையில் செதுக்கப்பட்ட அகத்தியர் சிலை உள்ளது. அதன் அடியில் உள்ள கெண்டியின் வாய் போன்ற பகுதியில் இருந்து அருவிநீர் வருகிறது. இந்நீரே திருக்குளத்தில் சேர்ந்து சிறப்புமிக்க அகத்தியர் தீர்த்தமாகிறது.

ஈசன் திருமணத்தால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த உலகைச் சமன் செய்ய இறைவன் ஆணைப்படி தென்புலம் வந்த அகத்தியர் வரும் வழியில் களாமரங்கள் அடர்ந்த பொன்மலையில் தங்கிய போது அங்குள்ள தவமுனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவலிங்கத்திற்கு வடபுறம் பொன்மலையில் தொட்டவுடன் தண்ணீர் அருவியாகப் பாய்ந்தது. அதுவே இன்று நாம் காணும் அகத்தியர் தீர்த்தமாகும். இத்தீர்த்தக்குளத்தை செண்பகமன்னர் ஏற்படுத்தினார் என்பது புராண வரலாறு. இத்தீர்த்தத்தில் நீராடி இத்திருத்தலத்து இறைவனை வழிபட்டால் பாவங்கள் மற்றும் பிணிகள் அகன்று எல்லா பேறுகளும் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

பழம் பாடலொன்று அகத்திய தீர்த்தத்தின் சிறப்பினை எடுத்து இயம்புகிறது.

தருமங்கள் மிகப்பயனீ திருக்கோவிற் புரியரனார் தாமேயாகும்
திருமங்கலம் வளரும் அகத்தியநல் தீர்த்தமன்பு சிறந்து மூழ்கில்
ஒருமுங்கில் மறமொழியும் செல்வமிகும் நோய்பேய் போம் ஒழியும் தீமை
இருமுங்கில் ஞானம் வரும் மும்முங்கில் அருள்விளங்கும் இதற்கீடிஃதே


இதற்கு உதாரணமாக சமீபகாலத்தில் இப்பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். மகப்பேறு இல்லாத பெண் ஒருத்தி தனது மனக்குறையை அருள் தரும் அம்மை செண்பகவல்லியிடம் முறையிட்டு வழிபட்டு வந்தாள். அம்பாள் ஒருநாள் அவள் கனவில் தோன்றி நீ அகத்தியர் தீர்த்தத்தில் நீராடி எழும் போது வெள்ளி எழுத்தாணி ஒன்று கிடைக்கும். அதைப்பார்த்து எடுத்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று அருள்வாக்குக் கூறினாள். அதன்படியே அப்பெண் அகத்தியர் தீர்த்தத்தில் நீராடி எழும் போது வெள்ளி எழுத்தாணி கிடைக்கப்பெற்றாள். பின்பு மகப்பேறு கிடைக்கப் பெற்றாள். அப்பெண்மணியின் வாரிசுதாரர்கள் இன்றும் இப்பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

இத் திருக்கோயிலின் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழாவான சித்திரைத் தீர்த்தம் இத்திருத்தலத்தின் தீர்த்தச் சிறப்பை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்நாளில் நீர் உள்ள காலங்களில் இப்பகுதி மக்கள் இத்தீர்த்தக் குளத்தில் நீராடி புத்தாடை அணிந்து இறைவனையும் அன்னை செண்பகவல்லியையும் வழிபட்டு எல்லா பேறுகளும் பெறுகின்றனர். பங்குனிப் பெருவிழாவில் பதினோராம் நாள் தெப்பத் திருவிழாவின் போது சுவாமி அம்பாள் இத்தீர்த்தக் குளத்தில்தான் (தெப்பத்தில்) பவனி வருகின்றனர். இத்திருக்கோயிலில் நடைபெறும் தீர்த்தவாரி திருவிழாக்களும் இத் திருக்குளத்தில் தான் நடைபெறுகின்றன.

இத்தீர்த்தக்குளத்திற்குச் செல்லும் வழியில் கோயில் மேட்டில் ஒரு விநாயகர் கோயிலும், திருக்குளத்திற்கு மேற்கில் படித்துறைக்கு அருகில் சித்தி விநாயகர் திருக்கோயிலும் அதனை அடுத்து அரசு, வேம்பின் அடியில் சிவசக்தி விநாயகர் திருக்கோயிலும் அமைந்திருப்பது இத்தீர்த்தத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பவை ஆகும்.

தலவிருட்சம்
இத்திருக்கோயிலின் தலவிருட்சம் களாமரம் ஆகும். இத்திருத்தலத்து இறைவன், களாமரங்கள் அடர்ந்து பூத்திருந்த காட்டிடையே தோன்றி லிங்கப் பெருமான் ஆதலால் அவருக்கு களாவனநாதர் என்ற பெயரும் உண்டு. வெம்பக்கோட்டையை ஆண்ட செண்பகமன்னன் களாக்காட்டினை அழித்து இத்திருக்கோயிலை அமைத்தான்.

இத்திருத்தலத்து இறைவன் தோன்றிய களாமரமே இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக, இன்றும் உயிர் மரமாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவிழா மூர்த்திகள் சந்நிதியின் முன்புறம் அமைந்துள்ள இத்தலவிருட்சத்தினைச் சுற்றி கருங்கல்லினால் மேடை அமைக்கப்பட்டு அதில் ஒரே பீடத்தில் அருள்மிகு விநாயகர், நாகர்கள், நந்தியுடன் சுவாமி அம்பாள், சாஸ்தா ஆகியோர் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்புமிக்க இந்த தலவிருட்சத்தின் முன்பு மணமாகப் போகும் மணமக்களின் பொருத்தம் பார்க்கும் நிகழ்ச்சி பழங்காலத்தில் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. தற்காலத்தில் மகப்பேறு வேண்டி மகளிர், இதனை வணங்கி இம்மரக்கிளைகளில் தொட்டில் கட்டிப் பயன் பெறுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் இருமுடிகட்டும் நிகழ்ச்சி, இங்கு அமைந்துள்ள சாஸ்தாவின் திருமுன்பு நடைபெறுவது இத்தலவிருட்சத்தின் தனிச்சிறப்பாகும்.


Post a Comment

Previous Post Next Post