திருவிளக்கு வழிப்பாட்டு விளக்கம் || கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடத்தும் போது பாடப்படும் பாடல்கள் மற்றும் மந்திரங்கள் || கணபதி வாழ்த்து || தேவி வாழ்த்து || திருவிளக்கு அகவல் || அர்ச்சனை 108 - Part 3

Part 1: திருவிளக்கு வழிபாடு || திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு || கணபதி வாழ்த்து || தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல் || தேவி வாழ்த்து || திருவிளக்கு அகவல் || திருவிளக்குப் பாடல் || கலச பூஜை || அர்ச்சனை செய்யும் முறை || அர்ச்சனை 108 || நிவேத்யம் || போற்றுதல் முறை

பகுதி 1 திருவிளக்கு வழிபாடு Click here to continue பாகம் 1



Part 2: திருவிளக்கு வழிபாடு || தீபலட்சுமியை வரவழைக்கும் திருவிளக்கு வழிபாடு || கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடத்தும் போது பாடப்படும் பாடல்கள் மற்றும் மந்திரங்கள் || கற்பூர நாயகியே கனகவல்லி || சங்கராய மங்களம் ||

பகுதி 2 திருவிளக்கு வழிபாடு Click here to continue பாகம் 2



திருவிளக்கு வழிபாட்டு விளக்கம்:
1. திருவிளக்கை தேவியாக வழிபடுவதால் தேவி அல்லது சக்தியின் மகிமையை முதலில் சிறிது சிந்திப்போம்; இந்து சமயமாகிய சனாதன தருமத்தில் ஆறு முக்கியமான கடவுள் வழிபாட்டு முறைகளுள்ளன. அவைகளை ஷண்மதம் அல்லது அறு சமயம் என்பர்.

அவையாவன: சைவம் (சிவ வழிபாடு) வைணவம் (விஷ்ணு வழிபாடு) காணாபத்யம் (கணபதி வழிபாடு) கௌமாரம் (முருகன் வழிபாடு) சாக்தம் (தேவி வழிபாடு) சௌரம் (சூரிய வழிபாடு) அவைகளில் இறைவனைத் தாயாக வழிபடுகின்ற வழக்கம் தொன்று தொட்டே உள்ளது. உலகில் தாயைப்போல் நம்மிடம் அன்பும் பரிவும் காட்டுபவர் வேறு ஒருவர் இல்லை.

ஆதலால் தாயை நினைக்கும் போது நம் மனம் எளிதில் நெகிழ்ந்து தாயின் வடிவில் ஒன்றுபட்டு விடுகிறது. தாயின் பெயர் கூறிய உடனேயே நம் உள்ளம் உருகுகிறது. இது உலகியல் பாசம் ஆகும். இந்த நேச பாசத்தை கடவுள் பால் திருப்புவதற்காக கடவுளைத் தாய் வடிவில் அல்லது பெண் வடிவில் நம் முன்னோர்கள் கண்டனர். கடவுள் தாய்க்கும் தாயாக உலகு அனைத்திற்கும் தாயாக இருக்கின்றார் என்ற உண்மையை நாம் தற்போது உணரவில்லை ஆண்டவன் நம்மீது எல்லை இல்லாத அன்பும் அருளும் உடையவர் என்பதை நாம் உணராமல் அவரை மறந்து உலக பந்தங்களில் மதிமயங்கித் திரிகிறோம்.

நம்முடைய மனத்தை எளிதில் இறைவன்பால் திருப்புவதற்குத் தாய்வடிவான தேவி வழிபாடு மிகவும் துணை செய்யும் மானைக் காட்டி மானைப்பிடிக்கும் தன்மை போல தாயன்பை உணர்ந்து உலகத்தாயாகிய தேவிபால் பக்தியை எளிதில் வளர்த்து விடலாம்.

தேவியும் தேவனும் இரண்டல்ல. இறைவனை ஆணாகவும் (தேவனாக), பெண்ணாகவும் (தேவி), அலியாகவும், அருவுருவாகவும், அருவாகவும், உருவாகவும் எப்படியும் எண்ணி வழிபடலாம். ஆனால் தேவி வடிவில் வழிபடுவது மிக எளிதான, இனிதான முறை. தேவி வழிபாட்டிலும் தேவியின் பல்வேறு திருவுருவங் களைப் பாவித்து பூசித்து வருகின்றனர். அவைகளில் துர்கா, காளி, லட்சுமி, ஸரஸ்வதி, ராஜராஜேஸ்வரி, மாரியம்மாள் முதலியன முக்கிய வடிவங்களாம்.

துர்கா தேவியின் திருவுருவம் வீரத்திற்கும், ஆற்றலுக்கும், சிங்கம் அஞ்சாமைக்கும் அடையாளமாய் விளங்குவது. அல்லது வேங்கையை வாகனமாகக் கொண்டவள். கையில் திரிசூலம், வாள் ஏந்தியமூர்த்தி, பத்துத் திசைகளையும் காப்பவள் என்பதற்கடையாளமாக படைகள் தாங்கிய பத்துக் கரங்களை உடையவள்.

துர்கா என்ற சொல்லை துர் + கா என்று பிரிக்கலாம். ஆபத்திலும், துன்பத்திலும் நம்மைக் காத்து வெற்றியருள்பவள் என்று பொருள். அவள் நல்லவர்களுக்கு இடையூறு செய்த மகிஷாசுரன் என்ற கொடியவனை மகிஷா அழித்ததினால் அவளுக்கு சுரமர்த்தினி என்ற பெயருண்டு. இது கதை. இதன் உட்பொருள் என்னவெனில், நமது உள்ளத்திலுள்ள காமம், கோபம், மயக்கம் முதலிய தீய விலங்கியல்பின் வடிவமே மகிஷன். அவளை வழிபட்டால் நம்மீது கருணை கொண்டு தேவி அதனை அழித்து நம்மைக் காப்பாள்.

லக்ஷ்மி என்பது அம்பிகையின் மற்றொரு திருவுருவம். விஷ்ணு சக்தி அல்லது வைஷ்ணவியாகிய லக்ஷ்மி நமக்கு எல்லா செல்வங்களையும், வளமையையும், அழகையும் அளித்துக் காப்பவள் ஆகும். அவளைத்திருமகள் என்பர். செந்தாமரைமேல் வீற்றிருப்பாள்.

ஸரஸ்வதி என்பது ப்ரம்மசக்தி அல்லது ப்ராம்மியின் திருவுருவம். எல்லாக் கலைகளையும் ஞானத்தையும் அளிப்பவள். வாக்கிற்கு அதிதேவதை. அவள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள். நான்கு கைகளையுடையவள். இரண்டு கைகளில் வீணையை மீட்டிக் கொண்டு, ஒரு கையில் புத்தகமும் இன்னொரு கையில் படிக மாலையும் படிகா ஏந்தியவள்.

நவராத்ரி விழாக்காலத்தில் இம்மூன்று சக்திகளையும் வழிபட்டு வணங்குவர். இதனால் வீரம், செல்வம், கல்வி ஆகிய பேறுகளை எளிதில் பெறலாகும்.

வெய்ய மகிடனை அழிக்க வீர துர்க்கையானாள்,
செய்ய திருவாய்த் தோன்றி செல்வச் செழிப்பைத் தருவாள்
மெய்யாம் கலைகளை அருள வெள்ளை வாணியாய் வருவாள்
உய்யும் அருளைச் சுரக்கும் சக்தி ஒன்றே ஒன்றே.




2. இத்தகைய பராசக்தியை நமது தாய்மார்கள் திருவிளக்கில் ஆவாகனம் பண்ணி வழிபடுகின்றனர். திருவிளக்கின் தத்துவம் என்ன என்பதைச் சிறிது பார்ப்போம். விளக்கு என்ற செந்தமிழ்ச் சொல் இருளை நீக்கி, பொருட்கள் நமது கண்களுக்கு விளக்குமாறு செய்கின்ற தீச்சுடர் என்று பொருள்படும். இல்லங்களில் ஏற்றப்படும் விளக்கானது இல்லின் அகத்தேயுள்ள இருட்டினை நீக்கி ஒளியையும் அழகையும் தருகிறது. அத்தகைய விளக்கினை மங்கலப்பொருளாக, மகாலெட்சுமியாக, சிவசக்தியாகக் கருதி வழிபடுவது தொன்று தொட்டு வருகின்ற நமது மரபாகும்.

விளக்கொளியைத் தெய்வமாகக் கருதி வழிபட்டால் புறவிருளோடு அகவிருளும் நீங்கும் அகவிருளாவது மனத்திலுள்ள அஞ்ஞானம் அல்லது அறியாமை, அறியாமையாவது இறைவன் யார், தான் யார், உலகம் எவ்வாறு தோன்றி இயங்கி ஒடுங்குகிறதென்று நாம் உணராதவாறு நமது அறிவை மறைக்கின்ற மாயாசக்தியாம்.

உலகம் எவ்வாறு தோன்றி இயங்கி ஒடுங்குகிறதென்று நாம் உணராதவாறு நமது அறிவை மறைக்கின்ற மாயாசக்தியாம். இதனை மும்மலம் என்று வேதாகமங்கள் விளம்பும். அனாதியாகவே செம்பிற்களிம்பு போல உயிர்களைப் பற்றிய இவ்வறியாமை இருளிலிருந்து யான் எனது என்னும் அகந்தை மமதைகளும் அவா, வெகுளி உலோபம் முதலிய தீய குணங்களும் முளைத்து, நம்மைப் பாவச் செயல்களைச் செய்யத் தூண்டுகின்றன. பாவச் செயல்களின் பயன் பெருந்துன்பமாகும், இத்தகைய கொடிய விளைவுக்கு வித்தாக அமைகின்ற அறியாமை இருளை அடியோடு ஒழிக்க வல்லவை ஆண்டவனது திருநாமங்களாகும். இவ்வுண்மையை கீழ்க்கண்ட அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாசுரம் சுருக்கமாகக் கூறுகின்றது.

‘இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே!'



3. இனி திருவிளக்கின் அமைப்பினைச் சிறிது பார்ப்போம். குத்துவிளக்கின் அடிப்பாகமாகிய பீடபாகம் மலர்ந்த தாமரைப்பூப்போல அகன்று வட்டமானதாக இருப்பதால் தாமரை மலர் மேலுறையும் பிரம்மதேவனைக் குறிக்கும்.

கீழ்த்தண்டுப் பாகம் தூண் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும். தண்டுக்கு மேலேயுள்ள எண்ணெய் வார்க்குமிடமாகிய அகல், கங்கையைச் சடையுள் வைத்த சிவனை ஒக்கும். திரி எரிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐம்முகமுடைய மஹேஸ்வரனை ஒக்கும்.

திரி எரிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐம்முகமுடைய மஹேஸ்வரனை ஒக்கும்.

அகலின் மேல் கும்பக்கலசம் போன்ற உச்சிபாகம் சிவலிங்கம் போலிருப்பதால், சதாசிவனை ஒக்கும். ஆக ஐந்து தெய்வ வடிவங்களின் (பஞ்சப்ரம்மம்) சின்னமாக அமையும் பெருமையுடையது திருவிளக்கு. எனவே எந்த வடிவத்தில் இறைவனை வழிபட வேண்டினும் திருவிளக்கை அந்தந்த தெய்வ வடிவமாகப் பாவித்து, அதனதற்குரிய மந்திரங்களைச் சொல்லி அர்ச்சிக்கலாம்.



4. திருவிளக்கின் சுடரை சிவசோதியாகவே கருதி திருவைந்தெழுந்து (சிவாயநம) முதலிய மந்திரங்களை ஓதி அன்புடன் வழிபட்டு வந்தால் 'விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி' என்ற சொல்லின் உண்மை புலப்படும்.

'சிவ' என்னும் சொல்லுக்கு மங்கலம், கல்யாணம்,இன்பம், நன்மை என்ற பொருட்களுண்டு. திருவிளக்கு வழிபாட்டு அர்ச்சனையின்

முதல் மந்திரம்:
‘ஓம் சிவாய நம:'

இரண்டாவது மந்திரம்:
'ஓம் சிவ சக்தியை நம:'

என்பவையாம்.

இவைகளில் முதல் மந்திரம் சூக்குமபஞ்சாட்சரத்தின் திரிபேயாகும். சிவாயை நம: என்றால் சிவசக்தியாகிய தேவிக்கு வணக்கம் இரண்டாவது நாமமும் இந்தப் பொருளிலேயே வருகிறது. சிவமும் சக்தியும் வேறுவேறல்ல. விளக்கும் அதன் ஒளியும் போல பாலும் அதன் இனிமையும் போல இணை பிரியாதவை. சிவமே சக்தி, ஆதலால் இந்த மந்திரங்களைச் சொல்லி வழிபட்டால், பாவந்தொலைந்து, புண்ணியம் பெருகும், அறியாமை நீங்கி அருளறிவு பெருகும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பேறும் பெறுவர்.

திருமந்திரப் பாடல்:
'சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினைமாளும் சிவ சிவ என்றிடத் தேவருமாவார் சிவ சிவ என்னச் சிவகதி தானே'


என்பது திருமந்திரப் பாடல்

ஔவையார் திருவார்த்தை:
'சிவாய நமவென்று சிந்தித்திருப்போருக்கு அபாய மொருநாளு மில்லை உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்.'


என்பது ஔவையார் திருவார்த்தை.

சிவாயநம என்பது சூக்கும் பஞ்சாட்சரம், நமச்சிவாய என்பது தூலபஞ்சாட்சரம் இரண்டும் சிவனருள் மந்திரங்களே!

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.


என்பது திருஞானசம்பந்தர் திருப்பாடல்.

முன்னெறி யாகிய முதல்வன் முக்கண்ணன் தன்னெறியே சரணாதல் திண்ணமே அந்நெறியே சென்றங் கடைந்தவர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சிவாயவே என்பது அப்பர் பெருமான் திருவாக்கு.

திருவிளக்கு வழிபாட்டில் நாம் நூற்றெட்டு (அஷ்டோத் தரசதம்) மந்திரங்களை ஓதி குங்குமம், மலர்தூவி வழிபடு கின்றோம். இந்த நூற்றெட்டு அர்ச்சனை மந்திரங்களும் பராசக்தி தேவியின் பெயர்களாயமைந்துள்ளன. அவைகளில் சில நாமங்களின் பொருளை இங்கு சிந்திப்போம். பொருள் தெரிந்து மந்திரங்களை ஓதினால் பலன் எளிதில் கை கூடும்.

முதன் முதலில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சற்று ஆராய்வோம். ஓம் என்பது, இறைவனது முழுமையான முதற்பெயர், இறைவன் நீராவி போல் அருவமாகவும் பனிக்கட்டி போல் பல்வேறு உருவங்களாகவும் உள்ளான். அங்ஙனம் வழிபடுவதற்கும், அருவநிலையை இறைவனின் உருவநிலைகளை வழிபடுவதற்கும் உரிய ஒரே மந்திரம் இப்பிரணவ மந்திரமாகும். இது ஆண்டவனது ஒப்பற்ற தனிமந்திரம். உலகப்படைப்பின் ஆதியில் தோன்றிய நாத தத்துவம்.

இதிலிருந்து தான் விண் முதல் மண் ஈறாகவுள்ள எல்லா பூதங்களும் உலகங்களும் உயிர் வகைகளும் தோன்றியுள்ளன. அது மட்டுமன்றி இவ்வொலி எங்கும் எல்லாப் பொருளிலும் நிறைந்து நிற்கிறது. இது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதல் எல்லாத் தேவர்களுமாயுள்ளது. இம்மங்கலவொலியை எப்போதும் உச்சரிப்பவர்களுக்கு எல்லாத் தடைகளும் துன்பங்களும் நீங்கி எல்லா நன்மைகளுமுண்டாகும். இது ஒலி மட்டுமல்ல இறைவனுடைய திருஉருவமுமாகும். இதைத் தனித்தும் மற்று மந்திரங்களுடன் சேர்த்தும் உச்சரிக்கலாம்.



5. நூற்றெட்டு அர்ச்சனையின் பின் நூற்றெட்டுப் போற்றி நாமங்கள் வருகின்றன. அவைகள் யாவும் நமது தேவாரத் திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற அருள் வார்த்தைகளாம். இவைகளையும் பக்தியோடு ஓதினால் உள்ளம் தூய்மையுற்று இறையருளை எளிதில் பெறலாகும்.



6. திருவிளக்கு வழிபாட்டில் முதலில் 108(அஷ்டோத் தரசத) சம்ஸ்கிருத நாமாவளிகளைச் சொல்லி அர்ச்சிக் கிறோம். இவ்வர்ச்சனை மந்திரங்களை, குரு அல்லது பூசை நடத்துபவரிடமிருந்து சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்ள வேண்டும். மந்திரங்களை ஓதுவதில் பிழை இருக்கக் கூடாது. நமது பெயரை பிழைபட அல்லது அரைகுறையாகச் சொல்லி யாராவது அழைத்தால் நமக்கு வருத்தம் ஏற்படுகிறதல்லவா? அப்படியழைப்பது முறையாகுமா?

அதுபோல, அல்லது அதை விட மேலாக, குறைவிலா நிறைவாகிய இறைவனையும் பிழையறப் பரவ வேண்டும். மந்திரங்கள் சரியாக உச்சரிக்கப் பெற்றால் அதிலிருந்து கிளம்பும் ஒலி அலைகள் சிறந்த பலனை விரைவில் தரும். மேலும் மந்திரமும் அதற்குரிய தேவதையும் (இறைவனும்) பிரிக்க முடியாதவையாகும்.

'வேத மந்திர சொரூபன்' என்று ஸ்ரீ அருணகிரிநாதர் முருகக்கடவுளை அழைக்கிறார்.

மந்திரங்கள் சரியாக, முறையாக உச்சரிக்கும் இடத்திலே இறைவனது அருள் தோற்றம் உண்டாகிறது.

அந்த இடம் அருளாற்றல் உடையதாக மாறுகிறது. மந்திரங்களை காதலாகிக் (பேரன்பு) கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் உள்ளமும், பாவக்கறைகள் நீங்கப் பெற்று தெய்வக் கோயிலாக மாறுகிறது. அவ்வுள்ளம் எண்ணியவெல்லாம் எளிதில் நிறைவேறுகின்றன. ஆதலால் கோயில்கள் தோறும் கோதையர்கள் ஒன்றுகூடி பக்தியுடன் நாமங்களை ஓதி திருவிளக்கு வழிபாடு செய்து, இறையருளுக்கு உரியவராகுங்கள்.

பதினான்கு வயதிலேயே பரந்தாமனோடு இரண்டறக் கலந்த ஆண்டாள் நாச்சியார் 'தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது, வாயினாற்பாடி மனத்தினாற் சிந்திக்க' என்று பூசை செய்யும் முறையை சுருக்கமாகச் சொல்கின்றார். 'தூயோமாய்' என்ற சொல் மிகவும் நமக்குச் கவனிக்கத் தக்கது.

தூய்மை அல்லது சுத்தம் இருவகைப்படும் அகத்தூய்மை, புறத்தூய்மை. 'புறத்தூய்மை நீரான் அமையும், அகத்தூய்மை, வாய்மையாற் காணப்படும்' என்ற தமிழ் மறையின்படி புறச்சுத்தம், தண்ணீரில் குளிப்பது தூய ஆடை அணிதல் முதலியவற்றால் உண்டாகிறது. உள்ளத்தூய்மை என்பது உண்மை, நேர்மை, கற்பு தன்னடக்கம், இரக்கம்,இன்சொல் பொறுமை, சோம்பலின்மை, உழைப்பு முதலிய ஒழுக்கத்தால் ஏற்படுவது. தூய ஒழுக்க நெறி நின்று, அதனால் மனம் தூய்மை ஆனவர்கள் செய்யும் பூசை உடனே பலனைத்தரும், பகவானது அருளைத்தரும்.



7. ஆதலால் திருவிளக்கு வழிபாடு செய்யும் மங்கையர் அனைவரும் தங்கள் நல்லொழுக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மங்கையரின் பிறப்பு மாண்புடையது என்று ஆன்றோர் கூறுவர். எத்தகையப் பெரியவராயினும் அவரது முதற்குரு அவரைப் பெற்றெடுத்த தாயேயாகும். மேலும் 'நூலைப் போல சேலை, தாயைப் போலப் பிள்ளை' என்பது பழமொழி ஆதலால் சிறந்த குழந்தைகள் உருவாக வேண்டுமேல் தாயார் சிறந்தவளாயிருத்தல் வேண்டும். கற்பென்னும் மனவடக்கம் மனைவியினிடத்திலிருக்குமேல் அவளைவிடச் சிறந்ததொரு செல்வம் அல்லது பேறு ஒருவனுக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு மற்றொன்றில்லை எனத் தெய்வப்புலவர் கூறுவார். பெண்ணுற் பெருந்தக்கயாவுள, கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்'. ஆனால் தற்கால சாபக் கேடாகிய ஆபாசத் திரைபடக் காட்சிகளைக் கண்டுகளிக்கும் மங்கையருக்குத் தங்கள் கற்பு நெறியை எந்த அளவிற்குக் காக்க முடியும் என்று சொல்ல முடியாது.

மேலை நாட்டு நடை உடை பாவனைகளை நமது புண்ணியப் பாரதத் தாய்மார்கள் பெண்ணிற்கு முழுக்கமுழுக்கப் பின்பற்றலாகாது. விடுதலை வேண்டும். அதற்கும் ஒரு எல்லை உண்டு.

'அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு' ஆகிய நான்கு அருங்குணங்களால் பெண் தனது கற்பைக் காக்க வேண்டுமென்பர்.

அச்சம்: தமக்குரிய ஆண்களின் துணையின்றி, தனி வழி நெடும் பயணம், வேற்று ஆண்களின் கூட்டுறவு முதலிய செயல்களில் ஈடுபடுதல் கூடாது என்பதையே அச்சம் என்ற சொல் காட்டுகிறது.

'மடம்' என்பது சில விஷயங்கள் தனக்குத் தெரிந்திருந்தாலும் வேற்று ஆடவர் முன் அவசியமின்றி அத்திறமைகளைக் காட்டிக் கொள்ளல் கூடாது என்பதாம்.

'நாணம்' என்பது மெல்லிய அழகிய தனது மேனியைப் பிறர் கண்டு களிக்காதவாறு ஆடைகளில் மறைத்து நடத்தல் முதலியவை. இந்தியத் தாய்குலத்திற்குப் பரம்பரையாகவே இருந்து வந்த இந்தச் சிறந்த பழக்கம் இப்போது அடியோடு ஒழிந்து விட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

'பயிர்ப்பு' என்றால் பிற ஆடவரைத் தொடுவதில் உண்டாகும் அருவருப்பு. தன் கணவனல்லாத பிற ஆடவரின் பரிசம் பெண்கள் மேல் படலாகாது. அழகு என்பது நற்குண நற்செய்கையைப் பொறுத்ததாகும். மேனி அழகை மட்டும் குறிப்பதல்ல. மேனி அழகு எத்தனை நாள் தங்கும் ? நற்குண நற்செய்கை ஒருவரை பல பிறவிகளில் உயர்ந்து சிறக்கச் செய்யும், பிறவா நிலையையும் தரும்.

'குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல-நெஞ்சத்து
நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு'


என்று அற்புதமான தமிழ்ப்பாட்டால் இக்கருத்தை அழகுற விளக்குகிறது. 'குஞ்சி' என்றால் கொண்டை. 'கொடுந்தானைக் கோடு' என்றால் புடவை (ஆடை) யின் சித்திரவண்ணம். 'மஞ்சள் அழகு' டால்கம் பவுடர் முதலியவைகளின் அழகு இவைகளெல்லாம் ஒரு பெண்ணிற்கு உண்மையான அழகையோ, பெருமையையோ தரா. ஆனால் அவர்களுடைய மனச்சாட்சிக்கு வஞ்சகமில்லாது அவர்கள் நல்லவர்களா யிருப்பின் அதுவே அவர்களுக்கு அழியாத அழகாகும் என நமது முந்தையோர் கூறினர். அவ்வழியை மறவாது இகழாது தற்காலத் தாய்மார்களும் செல்வார்களாயின் மாதா மாதம் அவர்களுக்காக ஒரு மழை பெய்யும். அவர்கள் 'பெய்' யென்றால் மழைபெய்யும் என்பார் வள்ளுவர்.

'தெய்வந் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை'


மேலும், பெண்கள் தங்கள் கணவரின் வருவாய்க்குத் தக்கவாறு சிக்கனமான, ஆடம்பரமற்ற வாழ்வுவாழ வேண்டுமென்று வள்ளுவர் விரும்புகிறார்.

‘மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டாள் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’


'கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி.' 'கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை'


என்ற பழமொழிக்கிணங்க அன்பும் அறிவுமுடைய கணவனது சொல்லை மீறாமலும் குறிப்பறிந்தும் நடப்பது கற்புடைய காரிகையர்க்கழகு. கணவனுடையவும் குடும்பப் பெரியோர்களுடையவும் விருப்பமும் அனுமதியுமின்றி பெண்கள் வெளியே உலாவி வருவது நன்றல்ல. தீய ஒழுக்கங்களுடைய பெண்களின் கூட்டுறவோ, அவர்களிடம் அவசியமின்றி பேசுவதோ கூடாது. வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு, அரட்டை அடிக்காமல், ராமாயணம், பாரதம், ஸ்ரீ சாரதா தேவியார் சரிதம் முதலிய தெய்வ நூல்களை வாசித்தல் நலம். காலை மாலை குழந்தைகளுடன் தானும் உட்கார்ந்து திருவிளக்கின் முன் பிரார்த்தனை செய்தல் வேண்டும்.

திருவள்ளுவர் தன் மனைவியாகிய வாசுகி அம்மையார் மறைந்ததும் மனம் மிக வருந்தி ஒரு பாடல் பாடினார்-அது

'அடிசிற் கினியாளே அன்புடை யாளே
படிசொல் தவறாத பாவாய்-அடிவருடி
பின்தூங்கி முன்னெழும் பேதையே போதியோ
என் தூங்கும் என்கண் இரா.'


அதன் பொருள்: 'எனக்குகந்த உணவு வகைகளை அறிந்து இனிமையாகச் சமைத்து அளிப்பவளே, என்மீது உண்மை அன்புடையவளே, என் சொற்படி நடந்தவளே, நான் களைப்புடன் தூங்கப் போகும்போது என் கால்களை மெல்ல வருடுபவளே, நான் தூங்கிய பின் நீ தூங்கி, நான் துயிலெழுவதன் முன் நீ எழுந்து வீட்டு வேலைகளைக் கவனித்து வந்தவளே, நீ போன பின் எனக்கு எங்ஙனம் நிம்மதி உண்டாகும்? என்று தெய்வப்புலவரே சிந்தை நைகின்றார். ஒரு பெண் மேற்சொன்ன கற்பரசி வாசுகி அம்மையாரைப் போல வாழ முயலல் வேண்டும்.

அதுவே இந்திய நாட்டுப் பெண்ணின் பண்பு, சீதை, சாவித்திரி, தமயந்தி, நளாயினி, கண்ணகி, திலகவதியார் போன்ற கற்பரசிகளின் வரலாறுகளைக் கற்று, அவர்களின் வழிவந்தவர் நாமென்று பெருமிதங் கொள்ள வேண்டும். அவர்களைப் பின்பற்றி வாழ முயல வேண்டும்.

'மேலை நாடுகளில் பெண்களை வெறும் சிற்றின்பப் பொருளாக, அதாவது மனைவியாக மட்டும் கருதுகிறார்கள். கீழை நாடாகிய நமது பாரதத்தில் பெண்ணைத் தாயாக, குடும்பத் தலைவியாகக் கருதி பெருமைப்படுத்துகிறார்கள்.' பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தற்காலத்தில் தனது மனைவியுட்படயெல்லாப் பெண்களையும் பராசக்தியின் வடிவங்களாகவே கண்டு கண்டு அதற்கிணங்க வாழ்ந்தார். பெண்மையைப் பெருமைப் படுத்தினால் எளிதில் பராசக்தி தேவியின் அருளைப் பெறலாம் என்பது உண்மை.

ஆனால் தற்காலத்தில் திரைப்படக்காட்சிகள், சிறுகதைகள், நாவல்கள், பத்திரிக்கைகள் பெண்மையைச் சிறுமைப் படுத்தி அவர்களது கற்பொழுக்கத்திற்குப் பெரிதும் ஊனம் விளைவிக்கின்றன. இது சமூக முன்னேற்றத்திற்குப் பெரும் ஆபத்தாக வந்துள்ளது. நாட்டிற்கு நல்ல அணிகலன்களாக விளங்கும் நன்மக்களை,. மாண்புடைய மங்கையர்கள் தாம் பெற்று வளர்த்துத் தர முடியும்.

"மங்களமென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு'


என்பது குறள்

முடிவாகப் பெண்கள் ஓய்வு நேரங்களில் தாங்கள் வாழும் ஊருக்கும் நாட்டிற்கும் பல நற்பணிகளைச் செய்ய முடியும்.

மாதர் மன்றங்கள் அமைத்து ஆலயந்தோறும் திருவிளக்குப் பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்தல், உழைப்போரின் குழந்தைகளுக்கான காப்பகங்கள் நடத்துதல், மாணவருக்கென சமய வகுப்புகள் நடத்துதல், அந்தர்யோகங்கள், பஜனைக் குழுக்கள், சத்சங்கங்கள் ஆகியவை நடத்துதல் போன்ற நற்பணிகள் அவர்களால் செய்ய முடியும்.

'புதுமைப்பெண்' கூறுவதாக மகாகவி பாரதியார் கூறுவார்.

'சாதம் படைக்கவும் செய்வோம் - தெய்வச் சாதி படைக்கவும் செய்வோம்'


என்றபடி சமூக நலனுக்காகத் தாய்மார்கள் உழைக்கலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறு கைத்தொழில்களான கூடை பின்னுதல், துணி பின்னுதல், தையல் வேலை, தீப்பெட்டித் தொழில் முதலியவைகளையும் ஓய்வு நேரங்களில் செய்யலாம், செய்விக்கலாம்.

இவ்வாறு கருமயோக, பக்தியோக, ஞானயோக வழிகளில் வாழ தாய்க்குலத்தைத் தூண்டுவதே இத்திருவிளக்கு வழிபாட்டின் நோக்கம்.

உலகன்னையின் வடிவங்களாகப் பெண்கள் விளங்குகிறார்கள் என்ற உணர்வைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்படுத்துவதற்காக உழைப்போமாக!



Part 1: திருவிளக்கு வழிபாடு || திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு || கணபதி வாழ்த்து || தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல் || தேவி வாழ்த்து || திருவிளக்கு அகவல் || திருவிளக்குப் பாடல் || கலச பூஜை || அர்ச்சனை செய்யும் முறை || அர்ச்சனை 108 || நிவேத்யம் || போற்றுதல் முறை

பகுதி 1 திருவிளக்கு வழிபாடு Click here to continue பாகம் 1



Part 2: திருவிளக்கு வழிபாடு || தீபலட்சுமியை வரவழைக்கும் திருவிளக்கு வழிபாடு || கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடத்தும் போது பாடப்படும் பாடல்கள் மற்றும் மந்திரங்கள் || கற்பூர நாயகியே கனகவல்லி || சங்கராய மங்களம் ||

பகுதி 2 திருவிளக்கு வழிபாடு Click here to continue பாகம் 2






Post a Comment

Previous Post Next Post